பாரதிதாசனால் இருபத்து நான்கு மனை ஏர் தெலுங்கர் செட்டி, அருமை மரபோங்க வந்த அண்ணல் ‘பெரு வள்ளல் ‘ எனப் புகழாரம் சூட்டப் பெற்ற திரு.எஸ்.ஐ அழகர்சாமி செட்டியார் அவர்கள், மதுரைக்கு தெற்கே ‘திருமங்கலம்’ என்னும் கிராமத்தில் திரு.ஐயண்ணன் செட்டியார் அவர்கட்கும் திருமதி.வெள்ளையம்மாள் என்பாருக்கும் 1878-ம் ஆண்டில் உதித்த ஒரே மகனாவார்.
கிராமத்தில் போதிய வருமானம் இல்லாமையால் இவர் பிறந்த ஓராண்டிற்குள் இவரது தந்தையார் திருமங்கலத்தை விட்டுச் சென்னைக்கு குடியேறி இராயபுரம் கல்மண்டபத்திற்கு அருகே அமைந்துள்ள தம்புச் செட்டி சந்தில் மிகச் சிக்கனமான முறையில் தம், குடும்பத்தை எளிய முறையில் நடத்தி வந்தார்.
இவர் சிறுவனாக இருந்தபோது ஒரு சிறு பள்ளியில் தாய்மொழியாம் தெலுங்கையும் தமிழையும் கற்று வந்தார். ‘தான் அடங்க தன குலம் விளங்க’ என்ற மூதுரைக்கேற்ப நடந்து வந்தார்.
1892-ம் ஆண்டில் தமது அன்னையையும் 1897-ம் ஆண்டில் தமது தந்தையாரையும் இழந்த நிலையில் தமது மூன்று சகோதரிகளை பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.தக்க சமயத்தில் சென்னை துறை முகத்தில் புகழ் வாய்ந்த ‘கார்டிங் கான்ட்ராக்டராக’ விளங்கிய திரு.வி.அழகர்சாமி செட்டியாரின் பேருதவி கிடைத்தமையால் ஆதரவற்ற நிலையில் அதனை ஏற்றுக் கொண்டார்.
சில ஆண்டுகள் கழித்து இவ்விருவரிடையே தோன்றிய மனத்தாங்கல் காரணமாகப் பிரிய நேரிட்டது அவரிடம் சேர்த்து வைத்திருந்த தொகையான ரூ.500-ஐ பெற்றுக் கொண்டு அவரிடமிருந்து பிரிந்து சென்று புயலில் அகப்பட்ட பறவை போலத் தத்தளித்து பசிப்பிணியை போக்கிக்கொள்ள வேண்டி,சென்னை துறைமுகத்தில் இயந்திரம் போல் கூலி வேலையில் கடுமையாக உழைத்து தம் வாழ்க்கையை நடத்தினார்.
1901-ம் ஆண்டில் திரு.இலட்சுமணன் செட்டியாரின் திருநிறைச்செல்வி வெள்ளையம்மாளை மணமுடித்தார். இவர் அழகர்சாமி செட்டியாரின் வாழ்க்கையினை வழிகாட்டியாகவும், சுடர்விளக்கின் தூண்டுகோலாகவும், நன்னெறி கூறும் நல்லமைச்சராகவும் திகழ்ந்தார். விதி இவரது வாழ்வில் விளையாடியதன் காரணமாக இவர் மனைவியர் ஓர் ஆண் மகனை ஈன்ற பொது தாயும் சேயும் அன்றே இயற்கை எய்தினர்.
அருமை மனைவியாரின் மறைவுத் துயரினை மறக்க பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு யாத்திரையாகச் சென்று மன அமைதியடைந்து, மீண்டும் சென்னைக்கே திரும்பினார். இவரது மனம் பக்குவமடைந்த இந்நிலையில் இவர் ஓர் சமூக சீர்த்திருத்தவாதியாகவும், இலட்சிய புருஷனாகவும் விளங்கினார். உலக மக்களை ஊடுருவிப் பார்த்த இவரது கண்கள் தம் சமூகத்தைச் சார்ந்த மக்களை நோக்க மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக தம்மின மக்களின் வாழ்வு அமைத்திருந்ததைக் கண்டு அவர்களின் வாழ்வு மேன்மையடைய செய்திடும் வலிக்கும் சமூக சிந்தனையில் ஈடுபடச் செய்தமையால் சமூகத்திற்கு பணி செய்து கிடப்பதே தம் பிறவிக் கடன் என உறுதி பூண்டார்.
தம் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு கல்வியொன்றே மூலக்காரணமாய் அமைந்திடும் என்றுணர்ந்த இவர்,தம் சமூக மக்கள் கல்வி கற்று தம் எதிர்கால வாழ்க்கையைச் செப்பனிடச் செய்திடும் வகையில், பல்வேறு ஏற்பாடுகளைச் செய்தார்.இதற்குத் தேவையான பொருளுக்கு தம் இனமக்களின் செல்வந்தவர்களாக விளங்கியவர்கள் உதவியினை நாடாமல் தாமே தம் உழைப்பினாலேயே பொருளீட்டிட ஒரு திட சங்கற்பம் செய்து கொண்டார். சிறு வியாபாரம் ஒன்றினைச் செய்து அதன் மூலம் ஈட்டிய பொருளால் செல்வந்தராகி,இச்செல்வத்தினை தம் சமூகத்தார் எல்லோரும் இன்புற்றிருக்க, ஏழ்மை நிலையிலிருந்த இளையோர்களின் கண்ணீரைத் துடைத்திடப் பயன்படுத்தினார்.
அழகர் முதன் முதலில் ஒரு திருமண மாளிகையைக் கட்டி முடித்ததும், ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்து சென்னை, இராயபுரம் ஆதம் சாயபு தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயம் எதிரே ஓர் நிலத்தை வாங்கி அழகானதோர் கட்டிடத்தையும், கட்டி அதற்கு எஸ். ஐ அழகர்சாமி திருமண மாளிகை எனப் பெயரிட்டார்.
தீடிரென தம் வியாபாரத்தில் ஏற்பட்ட சீர்குலைவின் காரணமாகப் பொருளாதார நிலையில் தடுமாற்றம் ஏற்பட வருமானம் குறைந்த நிலையில் இவரது உடல் நிலை குன்றியது.
இந்நிலையில் 1945-ம் ஆண்டில், மேற்படி திருமண மாளிகையை கல்வி ஸ்தாபனமாக்கி அதற்க்கு திருவாளர்கள் V.அழகர்சாமி செட்டியார், J.கிருஷ்ணசாமி செட்டியார், M.இராமசாமி செட்டியார், S.R.கணபதி செட்டியார், V.சுந்தரமூர்த்தி செட்டியார் ஆகியோரைக் கொண்ட ஓர் அறக்கட்டளை பொறுப்புக் குழுவினை அமைத்தார்.
இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கிடையேயும், மகாகவி பாரதியார் கவிதைக்கேற்ப
அண்ண சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
– பாரதி
என்பதற்கும், தமது வள்ளல் தன்மைக்கோர் எடுத்துக்காட்டாக ஒரு கல்வி ஸ்தாபனத்தை உருவாக்கி பேணிக்காத்த தன்மை இவரது பெயருடன் வள்ளல் என்ற அடைமொழியுடன் ஒட்டி அனைவராலும் புகழ்ந்து போற்றத்தக்கதாக விளங்கியது. தன் வாழ்நாளில் போற்றத்தக்க நிலையான கல்வி ஸ்தாபனத்தை தம் சமூக மக்களுக்கு உருவாக்கி அளித்த வள்ளல் S.I அழகர்சாமி செட்டியார் அவர்கள் 1947-ம் ஆண்டில் ஜனவரித் திங்கள் 6 – ம் தேதி இரவு 8.15 மணியளவில் மறைந்தார்.
அன்னாரது பூதவுடல் இவ்வுலகிலிருந்து மறைந்தாலும் அவரது எண்ணம் முழுமையடைய தம் சமூக மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டி மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த அவர்தம் பெயரில் 06.07.1983 அன்று துவங்கிய வள்ளல்.எஸ்.ஐ அழகர்சாமி செட்டியார் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக மேன்மை பெற்று புகழ் ஒளிவீசிடும் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றது.
Copyright 2021 VALLAL S.I ALALAGARSAMY CHETTIAR HSS. All Rights Reserved. Designed & Developed by InnovTouch Technologies